LFL Story

பெருமையுடன் அறிமுகம் செய்கிறோம்!
‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ தமிழ் இலக்கிய விழா!
 
உலகம் முழுவதும் உள்ள இலக்கியங்களையும், இலக்கிய ஆளுமைகளையும் உயர்த்திப் பிடிக்கும் விதமாக  ‘தி இந்து - லிட் ஃபார் லைஃப்’ எனும்  இலக்கியத் திருவிழாவை ‘தி இந்து’ குழுமம் 2011-ல் தொடங்கி ஆண்டுதோறும் கொண்டாடிவருகிறது. தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் அந்தத் திருவிழா, இந்த ஆண்டு ஜனவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் சென்னை சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளியின் சர் முத்தா கான்செர்ட் அரங்கில் நடக்கிறது.
 
பாரம்பரியம் மிக்க ‘தி இந்து’ குழுமத்துக்கு, இந்த ஆண்டில் மேலும் ஒரு பெருமை சேர்ந்துள்ளது. ‘தி இந்து’ குழுமம் இந்த வருடத்திலிருந்து தமிழுக்காக மட்டுமே முழுமையாக ஒரு நாளை ஒதுக்கி ‘லிட் ஃபார் லைஃப்’ தமிழ்த் திருவிழா’ நடத்துகிறது என்பதை வாசகர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஜனவரி 7-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளியின் சர் முத்தா கான்செர்ட் அரங்கில் ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ தமிழ் விழா நடக்கிறது.
 
தமிழில் சிறுகதை இலக்கியத்தின் நூற்றாண்டு கொண்டாட்டங்கள் நிறைவுற்றிருக்கும் தருணத்தில் ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ தமிழ் இலக்கிய விழா தனது முதல் அடியை எடுத்து வைக்கவிருப்பது மிகவும் பொருத்தமான தருணம். ஆகவே, முதலாம் ஆண்டு நிகழ்வு தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டை மையப்படுத்தியதாக அமைகிறது. தற்காலத் தமிழின் முக்கியமான எழுத்தாளர்கள், விமர்சகர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், திரைப்பட இயக்குநர்கள் என்று பலரும் தமிழ்ச் சிறுகதைகளின் வரலாறு, சமூக உள்ளடக்கம், சாதனைகள், எதிர்காலம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த நிகழ்வில் பேசவிருக்கிறார்கள்.
 
வாசகர்கள், தங்கள் உள்ளம் கவர்ந்த படைப்பாளிகளை நேரில் சந்திக்கவும், அவர்களுடன் கலந்துரையாடவும், அவர்களின் உரையைக் கேட்டு மகிழவும் வழி செய்யும் மேடையாகவே இதை நாங்கள் அமைத்திருக்கிறோம்.
 
மேலும் ஒரு நற்செய்தி! தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்துவரும் தமிழ்ப் படைப்பாளிகளை சிறப்பிக்கும் விதத்தில் ஆறு வெவ்வேறு பிரிவுகளில் விருதுகளையும் நிறுவியிருக்கிறோம். படைப்புத் திறனையும், சிறப்பான எழுத்துகளையும்  தொடர்ந்து ஊக்குவித்துவரும் ‘தி இந்து’ குழுமத்தின் குறிப்பிடத்தக்க பணிகளில், இதுவும் ஒன்றாக அமையும். 
 
வாசகர்களின் ஆதரவும் பங்கேற்பும் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான நிகழ்வுகளுள் ஒன்றாக ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ நிகழ்வை மாற்றும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். ‘தி இந்து’ வாசகர்களாகிய உங்களின் ரசனை, இலக்கிய அறிவு எவ்வளவு மேம்பட்டவை என்பதை அறிந்த படைப்பாளுமைகள் உங்களுடன் உரையாடுவதற்குக் காத்திருக்கிறார்கள். ஆகவே, வாசகர்கள் அனைவரையும் இந்தப் பெருநிகழ்வுக்கு அன்புடன் அழைக்கிறோம்! இது உங்கள் குடும்ப நிகழ்வு!
 
வாசகர்கள் இந்த ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ விழாவில் தங்களின் பங்கேற்பை உறுதிசெய்துகொள்ள REGISTRATION-ஐ க்ளிக் செய்யவும்.
 
வாருங்கள்.. இணைந்து கொண்டாடுவோம்!
Back to Top